போகவதி நகரத்து அரசனாகிய தேவவர்மன் என்பவனின் மகன் சுச்சோதிகன் நாரத முனிவரது கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து புஷ்பவனநாதரைத் தரிசனம் செய்து, மணிகர்ணிகையில் தர்ப்பணம் செய்து தமது முன்னோர்களை முக்தியடையச் செய்தான். அதனால் இத்தலத்திற்கு வந்து தமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்.
அந்தணன் ஒருவன் தனது தந்தையின் அஸ்தியையும், எலும்புகளையும் ஒரு குடத்தில் அடைத்து கங்கையில் கரைப்பதற்குச் சென்றான். இந்த தலத்திற்கு வந்து மணிகர்ணிகையில் நீராடியபோது அஸ்தி குடத்தில் இருந்த எலும்புகள் பூக்களாக மாறின. எனவே, அந்தணன் வடநாடு செல்லாமல் இங்கேயே பித்ருக் கடன்களைச் செய்தான் என்று தல வரலாறு கூறுகிறது. அதனால் இத்தலம் 'காசிக்கு சமமானத் தலம்' என்றும் 'பித்ரு கடன் செய்வதற்கு ஏற்ற தலம்' என்றும் கூறப்படுகிறது.
மூலவர் 'புஷ்பவனேஸ்வரர்', 'பூவணநாதர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். சதுர வடிவ ஆவுடை, சற்று பெரிய பாணம். மூலவர் திருமேனியில் சடைமுடியும், திரிசூல வடிவும் காணப்படுகிறது. கற்பூர ஆரத்தியின்போது சற்று உற்று நோக்கினால் இதைக் காணலாம். அம்பிகை 'சௌந்தர நாயகி', 'மின்னனையாளம்மை' என்னும் திருநாமங்களுடன், அழகிய பெரிய வடிவினளாக தரிசனம் தருகின்றாள்.
இவ்வூரில் வசித்த பொன்னையாள் என்னும் நாட்டியப் பெண், பொன்னால் இறைவனுக்கு திருவுருவம் அமைக்க விரும்பினாள். ஆனால் அதற்கு தேவையான அளவு பொன் தன்னிடம் இல்லாததால் பூவணநாதரை வேண்டி பூசை செய்தாள். அதனால் மனம் இரங்கிய சிவபெருமான், சித்தர் உருவம் கொண்டு அவள் வீட்டிக்குச் சென்றார். வீட்டில் உள்ள உலோகப் பொருட்களை எல்லாம் கொண்டு வரச் செய்து, அதை இரசவாத முறையில் பொன்னாக்கி, இறைவனின் திருவுருவத்தையும் செய்து அளித்தார்.
அழகான அந்தச் சிலையைக் கண்ட பொன்னையாள் மகிழ்ந்து ஆசையுடன் அதன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். அதனால் அவளின் நகக்குறி அந்தத் திருவுருவத்தில் பதிந்தது. இன்றும் கோயிலில் உள்ள இந்தச் சிலையில் இந்த அடையாளத்தை நாம் காணலாம். இவருக்கு 'அழகிய நாயகர்' என்று பெயர். பொன்னனையாளின் சிலையும் கோயிலில் உள்ளது.
இக்கோயிலில் வழிபட வந்த திருஞானசம்பந்தருக்கு வைகை மணலெல்லாம் லிங்கமாகத் தெரிய, அதை மிதிப்பதற்கு அஞ்சி அக்கரையிலேயே நின்று வழிபட்டார். அவர் வழிபடுவதற்கு வசதியாக நந்தியை சற்று சாய்ந்து இருக்கும்படி பெருமான் கட்டளையிட, சம்பந்தரும், அடியார்களும் வழிபட்டனர். அதனால் கோயிலின் நந்தி சாய்ந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலிலும் கல்லினால் ஆன சுமார் 5 அடி உயரமுள்ள நடராஜர் - சிவகாமி அம்மன் சிலை அற்புதமாக உள்ளது. கோரக்க சித்தரின் சன்னதியும் இங்குள்ளது.
திருமால், பிரம்மதேவர், காளி, இந்திரன், சூரியன், சந்திரன், அகத்தியர், வசிஷ்டர், நளச் சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இங்கு வந்து வழிபட்ட பின்புதான் நளச் சக்கரவர்த்திக்கு கலியின் தோஷம் நீங்கியது.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், அப்பர் மற்றும் சுந்தரர் தலா ஒரு பதிகங்களும் பாடியள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இரண்டு இடத்திலும், 9ம் திருமுறையில் கருவூர்த் தேவரின் திருவிசைப்பாவிலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|